Saturday, 18 April 2009

சுவரில்லாமல் ஒரு வீடு... சுதந்திரமாக உலா வரும் காற்று : அதிசய வீட்டில் வசிக்கும் குடும்பம்

அனைவருக்கும் சொந்த வீடு கட்டும் கனவு உண்டு. ஆனால், ஜன்னல், சுவர்கள் இல்லாமல் ஒரு வீடு கட்ட எத்தனை பேருக்கு ஆசை வரும்?
இயற்கையை சுவாசமாக நேசிக்கும் கோவை, தொண்டாமுத்தூரை சேர்ந்த பொறியாளர் சுப்ரமணியம், இதுபோன்ற ஒரு வீடு கட்டி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக, அதில் குடும்பத் துடன் குடியிருந்து வருகிறார். நகரங்களில் பெருகி விட்ட கான்கிரீட் காடுகளால், சுத்தமான காற்றை சுவாசிப்பது என்பது கனவில் மட்டுமே நிறைவேறும் ஆசை.
நாலாபுறமும் வீசும் நச்சுக் காற்றுக்கு மத்தியில் மூச்சு முட்ட வாழ்வதை விரும்பாத சுப்ரமணியன், தொண்டாமுத்தூர் தென்னமநல்லூரில் வீடு முழுவதும் காற்று குடியிருக்கும் வகையில் புது மாதிரியான ஒரு வீட்டை கட்டியுள்ளார்.இந்த வீட்டில் அடித்தளம் வரை மட்டுமே சிமென்ட், கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு மேல் கம்பிகள் மட்டுமே சுவர்களாக உள்ளன. சிறு பூச்சிகள் நுழைந்து விடாமலிருக்க, கம்பிகளை வலையால் மறைத்துள்ளார். வீட்டைச் சுற்றிலும் வளர்க்கப்பட்டு வரும் மூலிகைச் செடிகளில் இருந்து வரும் காற்று, சுவர்கள் இல்லாத வீட்டின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து மணம் பரப்புகிறது.1,300 சதுர அடி பரப்பளவுள்ள வீட்டில் சமையல் அறை, ஹாலுக்கென தனி அறைகள் இல்லை. அறையில் உள்ள சிறு மேடையில் அமர்ந்தபடி வேதாத்திரி மகரிஷியின் வரிகளை சுப்ரமணியம் உரக்க படிக்க, அதைக் கேட்டுக் கொண்டே அதே அறையின் மூலையில் சுடச்சுட கோதுமைக் கஞ்சி சமைக்கிறார், அவரது மனைவி ஜெயந்தி.
அறையில் சோபா செட், டீப்பாய், "டிவி', பேன், "ஏசி', என சுத்தமான காற்றின் சுதந்திர வரவை தடுக்கும் எந்த பொருட்களும் இல்லை. தூதுவளை, சிரியாநங்கை போன்ற மூலிகைச் செடிகளில் இருந்து தவழ்ந்து வரும் காற்றை சுவாசித்தபடி, குளிர்ச்சி தரும் வெட்டி வேர் பாயில் படுத்தால் சுகமான தூக்கம் வரும்.
வீட்டில் இரண்டு மாடி அறைகளும் உண்டு. குருவிகளைத் தவிர, அதிகாலையில் இக்குடும்பத்தினர் செய்யும் யோகாசனப் பயிற்சிகளின் இடையே தொந்தரவு செய்ய யாருமில்லை. உணவு கூட பெரும்பாலும் கம்பு சாதம், கோதுமை, ராகி கஞ்சி என சைவ உணவுதான். இத்துடன் மூலிகை இலைகளை மென்றபடி "வாக்கிங்' செல்வது, இவர்களை முழு ஆரோக்கியமுடன் வைத்துள்ளது.

மூலிகைக் காற்று தாண்டவமாடும் தனது வித்தியாசமான வீடு பற்றி ஓய்வு பெற்ற பொறியாளரான சுப்ரமணியம் கூறுகையில், "45 ஆண்டுகளாக கோவையின் மையப் பகுதியில் குடியிருந்தோம். தூசு, வாகன புகை உள் ளிட்ட மோசமான சுற்றுச்சூழலில் இருந்து விலகி, சுத்தமான காற்றை சுவாசித்து அமைதியாக வசிக்கவே இந்த புதிய வீட்டை அமைத்தோம். சிமென்ட், செங்கல், கான்கிரீட் இல்லாத இந்த வீட்டைக் கட்ட ரூ.11 லட்சம் செலவானது. பனிக்காலங்களில் வீடு முழுவதும் பரவும் பனி, மழைக்காலங்களில் தடையில் லாமல் நுழையும் மழைச் சாரல் ஆகியவற்றால் இயற்கையின் அத்தனை சுகத்தையும் கலப்படமில்லாமல் அனுபவிக்கிறோம். தடுப்புகள் இல்லாத ஒரே அறையில் எப்போதும் பேசியபடியும், ரேடியோ கேட்டபடியும் இருப்பதால் மிகவும் நெருக்கமாக உணர்கிறோம்,'' என்றார்.
இரு பசுக்கள், ஒரு கன்று வைத்திருந்தாலும் இக்குடும் பத்தினர் பால் குடிப்பதில்லை. "பசுவின் பால் அதன் கன்றுக் கானது. கன்றை கட்டிப் போட்டு தாயிடமிருந்து பாலை கறந்து குடிக்க நமக்கு உரிமையில்லை,'' என்கிறார் மெக்கானிக்கல் இன்ஜினியரான இவரது மகன் விஜேஷ். பண்ணையில் வளரும் மூலிகைப் பயிர், விளைப் பொருட்களில் துளியும் ரசாயன உரம் கலந்து விடாமல் இயற்கையாக வளர்ப்பதில்தான் இவரது முழுக் கவனமும்.
மாட்டின் கோமியம், வெல்லம், சாணம், தண்ணீர் கலந்து இவர் தயாரிக்கும் 'ஜீவாமிர்தம்' தான் தளதளவென வளர்ந்து நிற்கும் இங்குள்ள பயிர்களுக்கு உரம். "இயற்கைதான் இறைவன். அதை நன்கு புரிந்து நாசம் செய்யாமல் வாழ்வதால் இறைவனுடனே வாழ்வதாக உணர்கிறோம். எங்கிருந்தாலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள் வளர்த்து இயற்கையை மாசுப்படுத்தாமல் இருந்தால் அனைவரும் இறைவனுடன் வாழலாம்,'' என்கின்றனர் இக்குடும்பத்தினர் கோரஸாக. இதமான இளங்காற்று எப்போது வேண்டுமானாலும் வந்து தங்கிச் செல்லும் வகையிலும், பூகம்பம் தாக்காமல் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதாலும் இவர்களின் வீட்டுக்கு, "சிறந்த சுற்றுச்சூழல் வீட்டுக்கான" விருது வழங்கி "ராக்" அமைப்பு கவுரவித்துள்ளது.


நன்றி: தினமலர்

நாமும் இந்த வீட்டிற்கு "இயற்கை குடில்" என்ற பட்டம் சூட்டி கௌரவிப்போம்.

இந்த வீட்டை உருவாக்கிய சுப்ரமணியம் குடும்பதினருக்கு நமது அன்பான வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

Thursday, 9 April 2009

எது நிரந்தரம் ?

எது நிரந்தரம் ?

துவக்கம் எற்பட்டால் முடிவும் வந்திடும்!
இயக்கம் எற்பட்டால் இறுதியில் நின்றிடும்!
மயக்கம் எற்பட்டால் மதியும் ஓய்ந்திடும்!
மரணம் எற்பட்டால் உடலும் சாய்ந்திடும்!

எது நிரந்தரம் ?

நீ உடல் அல்ல
நீ மனதல்ல
மதியாகியதும் நீ அல்ல
இவ்வுலகில் எதுவும் உனதல்ல
நீ படைத்ததும் பயனல்ல..

எது நிரந்தரம் ?