Friday 1 May 2009

பற்றை நீக்குவோம்; அன்பை வளர்ப்போம்

இந்த பதிவை, வள்ளுவனை வணங்கி, திருக்குறள் கொண்டு தொடங்குவோம்.

திருக்குறள் (349):
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும்
விளக்கம்:
பற்றுகளைத் துறந்துவிட்டால், பிறப்பில் ஏற்படும் இன்ப துன்பங்கள் வருவதில்லை. இல்லையேல், அந்த இன்ப துன்பங்கள் மாறிமாறி வரக்கூடிய நிலையாமை தோன்றும்.

அண்மையில் படித்த கட்டுரைகளில், என்னை கவர்ந்த இந்த கட்டுரையை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் சந்தோஷம் அடைகிறேன். இந்த கட்டுரை அன்புக்கும் பற்றுக்கும் உள்ள வேறுபாடுகளை தெளிவாகவும் எளிதாகவும் விளக்குகிறது. இப்பொழுது கட்டுரைக்கு செல்வோம்..

'அன்பினால் உலகையே வளைத்து விடலாம் என்று நினைத்தேன். கடைசியில் வளைந்தது என்னவோ நான் தான்.' 'அன்பு செலுத்தியதால் துன்பத்துக்கு ஆளாகி இருக்கிறேன்' எனும் புலம்பலைக் கிட்டத்தட்ட எல்லோரிடமும் கேட்க முடிகிறது! நமது துன்பத்துக்கு காரணம், அன்பல்ல... பற்று என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அன்புக்கும் பற்றுக்கும் நிறைய வேற்றுமைகள் உண்டு. அறைக்கு வெளியே பார்க்கிறேன்... நந்தவனத்தில், மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. அவற்றில் சில மலர்களே இறை வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மீத முள்ளவை, பதில் புன்னகையைக்கூட எதிர்பாராமல் சிரிக்கின்றன.
அன்பு - எதிர்பார்ப்புகள் அற்றது; பற்று, எதிர்பார்ப்புகள் நிறைந்தது. நாம், 'அன்பு செலுத்துகிறோம்' என்ற பெயரில், மூட்டை மூட்டையாக எதிர்பார்ப்புகளையும் சேர்த்துச் செலுத்துகிறோம். அதனால், ஏமாற்றங்களை சந்தித்துத் துவண்டு போகிறோம். அன்பு, ஏமாற்றம் அடைவதில்லை. ஏனெனில், அன்பு எதையும் எதிர்பார்ப்பதில்லை. ஆங்காங்கு பயிர்களுக்கும் உயிர்களுக்கும் உயிரூட்டியபடி நகர்ந்து கொண்டிருக்கும் நதியைப் போல, அன்பு உடையவனின் வாழ்க்கையும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. இடையறாது அன்பு செலுத்துதலே தனது இயல்பாகக் கொண்டவனின் எண்ணங்கள் மேன்மையானவையாக இருக்கும். அவனது சொற்களில் தூய்மையும் இனிமையும் ததும்பும்; செயல்கள் சமுதாயத்துக்கு நன்மை பயப்பனவாக இருக்கும்.


சிறு வயதில்... ஆசையாக மணல் வீடு கட்டி, பிறகு காலால் அதை எட்டி உதைத்துவிட்டு வந்தவர்கள்தான், இப்போது பொருட்கள் மீதும் மனிதர்கள் மீதும் பற்று வைத்து, கவலைக் கடலில் ஆழ்ந்து கிடக்கின்றனர். தனது காரின் மீது சின்ன கீறல் விழுந்தாலும், தன் உடலிலேயே கீறல் விழுந்தது போல் துடிப்பவர்கள் உண்டு! பற்று கொண்டவன் தன்னையும் அறியாமல், பிறரது சுதந்திரத்தில் குறுக்கிட்டு, தனது சுதந்திரத்தையும் நிம்மதியையும் சேர்த்து இழக்கிறான். பற்றற்றவனோ, பிறருக்கும் சுதந்திரம் அளித்து, தானும் சுதந்திரமாக இருக்கிறான். மகாபாரத யுத்தத்தின் சூத்திரதாரியான கிருஷ்ணர் நினைத்திருந்தால், போர் புரிந்தே ஆக வேண்டும் என்று அர்ஜுனனுக்கு கட்டளை இட்டிருக்க முடியும். ஆனால், உள்ளத்தில் பற்று நெருப்பு பற்றி எரிய தன்னிடம் சரண் அடைந்த அர்ஜுனனுக்கு, அவன் உள்ளம் குளிர... அறிவு தெளிவுற... கீதை என்ற அறிவமுதத்தை ஊட்டினார். அதன் பிறகு, ''நான் கூற வேண்டியதைக் கூறி விட்டேன். உனது விருப்பம் போல் செய்'' என்று முழு சுதந்திரம் கொடுத்தார் கிருஷ்ணர்.

பறவையின் மீது பற்று கொண்டவன், அதை கூண்டில் அடைக்கிறான். பறவையைப் பாதுகாக்கும் பொறுப்பில் தானும் சிக்கிக் கொள்கிறான். அதே பறவையின் மீது அன்பு செலுத்துபவன், அது ஆகாயத்தில் பறப்பதை ஆனந்தமாக வேடிக்கை பார்க்கிறான். பற்று, பந்தப்படுத்துகிறது; அன்பு, விடுதலை அளிக்கிறது! பற்று கொண்டவன், தன்னைச் சுற்றி வட்டங்கள் போட்டுக் கொண்டு, தானும் அதில் சிக்கிக் கொள்கிறான். அன்பு கொண்டவன், எல்லைகளைக் கடந்தவனாக நிம்மதியை சுவாசிக்கிறான். பற்று குறுக்கிக் கொள்கிறது; அன்பு பரந்து விரிகிறது.

வாழ்க்கை என்பது அன்பால் விரியும் வட்டம்! சுவாமி விவேகானந்தர் சிறு வயதில், அவரைப் பெற்றெடுத்த அன்னையும், சில சகோதர- சகோதரிகளும் இருந்தனர். அவரது வட்டம் விரிந்தது. அவர் ராமகிருஷ்ணரின் சீடரானதும் அன்னை சாரதாதேவி அவருக்கு அன்னையானார். ராமகிருஷ்ணரின் பிற சீடர்கள், சகோதரர்கள் ஆனார்கள். வட்டம் விரிந்தது. பாரதம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டு, குமரி முனையில் தவம் செய்தார். பாரதத் தாய் அன்னையானாள்; பாரத தேசத்தவர் அனைவரும் அவரது சகோதர- சகோதரிகள் ஆனார்கள். வட்டம் இன்னும் விரிவடைந்தது. சிகாகோவில் உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். இப்போது... உலக அன்னை, அவரின் அன்னையானாள். உலக மக்கள் அனைவரும் அவரின் சகோதர- சகோதரிகள் ஆனார்கள்.'அமெரிக்க நாட்டு சகோதர- சகோதரிகளே!' என்று அவரின் இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்த அந்த தூய சொற்கள்... பொருளியலில் மூழ்கி, குறுகிய மனம் படைத்தவர்களாக துயரத்தில் ஆழ்ந்திருந்த எண்ணிலடங்கா மக்களுக்கு ஆறுதல் அளித்தது. அன்பில் இருந்து உதித்த அவரது சொற்கள், வாழ்க்கையைப் பற்றிய விசாலமான பார்வையையும் பாரத நாட்டின் அருளியல் சிந்தனையையும் இன்றும் உணர்த்திக் கொண்டிருக்கிறது. பற்று-சுயநலம் மிக்கது; அன்பு- சுயநலமற்றது! பற்று பறிக்கும்; அன்பு வழங்கும்!.

சுவாமி விவேகானந்தரின் காலத்தில் பவஹாரி பாபா எனும் மகான் ஒருவர் இருந்தார். ஒரு நாள், அவரது திருவோட்டை ஒருவன் திருடி விட்டான். தப்பித்துச் செல்வதற்குள் மகான் பார்த்து விட்டதால், திருவோட்டை அங்கேயே போட்டு விட்டு ஓடினான். பவஹாரி பாபா விடவில்லை. அவனைத் துரத்திச் சென்றார். நீண்ட தூரத்துக்குப் பிறகு அவனை நெருங்கியவர், ''எப்போது உனக்கு இந்தப் பொருள் மீது ஆசை வந்ததோ, அப்போதே அது உன்னுடையதாகி விட்டது. உனது பொருள் உன்னிடம்தான் இருக்க வேண்டும்'' என்றவாறு திருவோட்டை அவனிடம் கொடுத்தார். அன்பு அமைதியில் நிலைத்திருக்கும்; பற்று கோபத்தில் ஆளும்!. உண்மையான அன்பு எவரையும் கட்டிப் போடாது; நிபந்தனைகள் விதிக்காது. அனைத்தையும் அனைவரையும் உள்ளது உள்ளபடியே ஏற்றுக் கொள்ளும். ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு திட்டத்துடன் உலகில் பிறந்திருக்கிறான். நமக்குக் குழந்தைகளாகப் பிறந்துவிட்ட காரணத்தாலேயே அவர்கள் மீது நமது கருத்துகளைத் திணிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சின்னஞ்சிறு குழந்தையைப் பார்த்து, ''நீ டாக்டரா, இன்ஜினீயரா... என்னவாக விரும்புகிறாய்?'' என்று கேட்கிறோம். அந்தப் பிஞ்சு மனதுக்குள் ஓர் உயர்ந்த கவிஞனோ ஓவியனோ உறங்கிக் கொண்டிருக்கலாம். அவனைத் தட்டி எழுப்ப நமக்குத் தெரிவதே இல்லை. 'உங்கள் குழந்தைகள் உங்களுடையவர்கள் அல்ல. அவர்கள், உங்களிடமிருந்து வரவில்லை. உங்கள் மூலமாக வந்திருக்கிறார்கள்' - கலீல் கிப்ரானின் வசீகர வரிகள் இவை! தவறு செய்யும் குழந்தைகளை அல்லது குடும்பத்தினரைக் கண்டிப்பதோ அறிவுறுத்துவதோ தவறு இல்லை. நம் எண்ணப்படி அவர்கள் நடக்கவில்லையே என்று கவலைக் கடலில் ஆழ்வதுதான் தவறு. மாற்றங்கள் இயல்பாக நிகழும் வரை பொறுமை அவசியம். தானே மலர்ந்த மலருக்கும் நாம் தட்டியதால் வலிக்க வலிக்க இதழ்களை விரித்த மலருக்கும் வித்தியாசம் உண்டு. பற்று, பதட்டத்தில் ஆழ்ந்து புலம்பு கிறது; அன்பு, பொறுமையாகச் சிந்தித்துப் புரிந்து கொள்கிறது.

அன்பு கொண்டவன், எவரையும் உடைமைப் பொருளாகக் கருதுவது இல்லை. அவன், தனது உடைமைகளின் மீது கூட உரிமை கொண்டாடுவது இல்லை. ரயிலில் பயணிக்கிறோம். ஆறு மணி நேர பயணத்தில், இது எனது இடம்; அது உனது இடம் என்று சண்டை ஓய்வதற்குள் சேருமிடம் வந்து விடுகிறது. வாழ்க்கையிலும் இப்படித்தான்! வாழும் சிறிது காலத்துக்குள், 'இது எனது நிலம்; அது உனது நிலம்' என்று சண்டையிட்டு, என்னுடையவர் உன்னுடையவர் என்று பிரிவினை பேசி, துன்பத்தை வளர்த்துக் கொள்கிறோம்.

பற்று கலவாத உண்மையான அன்பு தெய்வீகம் ஆனது; ஆற்றல் மிக்கது; அது, உலகையே அரவணைத்துக் கொள்ளும். உலகப் பற்றில் ஆழ்ந்திருப்பவனுக்கு கடவுளைப் பற்றிக்கொள்ள நேரமில்லை. கடவுளுக்கென ஒதுக்க அவன் உள்ளத்தில் இடமும் இல்லை!. பற்றற்றவன், கடவுளை பற்றிக் கொண்டு கடவுளை எங்கும் காணும் அறிவை அடைந்து, அந்தப் பற்றையும் நீக்கி விடுகிறான். ஆனந்தத்தில் நிலைத்திருந்து, எங்கும் அன்பை பாய்ச்சுகிறான். அனைத்திலும் பரம்பொருளைக் காண்பதே ஆன்மிகத்தின் அறுதித் தத்துவம். பற்றை நாம் நீக்கத்தான் வேண்டும். இல்லையெனில், பற்றுக்கு உரிய பொருளையோ மனிதரையோ காலம் நம்மிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்துச் சென்று விடும்.

பற்றை நீக்குவோம்; அன்பை வளர்ப்போம்!

நன்றி: விகடன்

Saturday 18 April 2009

சுவரில்லாமல் ஒரு வீடு... சுதந்திரமாக உலா வரும் காற்று : அதிசய வீட்டில் வசிக்கும் குடும்பம்

அனைவருக்கும் சொந்த வீடு கட்டும் கனவு உண்டு. ஆனால், ஜன்னல், சுவர்கள் இல்லாமல் ஒரு வீடு கட்ட எத்தனை பேருக்கு ஆசை வரும்?
இயற்கையை சுவாசமாக நேசிக்கும் கோவை, தொண்டாமுத்தூரை சேர்ந்த பொறியாளர் சுப்ரமணியம், இதுபோன்ற ஒரு வீடு கட்டி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக, அதில் குடும்பத் துடன் குடியிருந்து வருகிறார். நகரங்களில் பெருகி விட்ட கான்கிரீட் காடுகளால், சுத்தமான காற்றை சுவாசிப்பது என்பது கனவில் மட்டுமே நிறைவேறும் ஆசை.
நாலாபுறமும் வீசும் நச்சுக் காற்றுக்கு மத்தியில் மூச்சு முட்ட வாழ்வதை விரும்பாத சுப்ரமணியன், தொண்டாமுத்தூர் தென்னமநல்லூரில் வீடு முழுவதும் காற்று குடியிருக்கும் வகையில் புது மாதிரியான ஒரு வீட்டை கட்டியுள்ளார்.இந்த வீட்டில் அடித்தளம் வரை மட்டுமே சிமென்ட், கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு மேல் கம்பிகள் மட்டுமே சுவர்களாக உள்ளன. சிறு பூச்சிகள் நுழைந்து விடாமலிருக்க, கம்பிகளை வலையால் மறைத்துள்ளார். வீட்டைச் சுற்றிலும் வளர்க்கப்பட்டு வரும் மூலிகைச் செடிகளில் இருந்து வரும் காற்று, சுவர்கள் இல்லாத வீட்டின் மூலை முடுக்கெல்லாம் புகுந்து மணம் பரப்புகிறது.1,300 சதுர அடி பரப்பளவுள்ள வீட்டில் சமையல் அறை, ஹாலுக்கென தனி அறைகள் இல்லை. அறையில் உள்ள சிறு மேடையில் அமர்ந்தபடி வேதாத்திரி மகரிஷியின் வரிகளை சுப்ரமணியம் உரக்க படிக்க, அதைக் கேட்டுக் கொண்டே அதே அறையின் மூலையில் சுடச்சுட கோதுமைக் கஞ்சி சமைக்கிறார், அவரது மனைவி ஜெயந்தி.
அறையில் சோபா செட், டீப்பாய், "டிவி', பேன், "ஏசி', என சுத்தமான காற்றின் சுதந்திர வரவை தடுக்கும் எந்த பொருட்களும் இல்லை. தூதுவளை, சிரியாநங்கை போன்ற மூலிகைச் செடிகளில் இருந்து தவழ்ந்து வரும் காற்றை சுவாசித்தபடி, குளிர்ச்சி தரும் வெட்டி வேர் பாயில் படுத்தால் சுகமான தூக்கம் வரும்.
வீட்டில் இரண்டு மாடி அறைகளும் உண்டு. குருவிகளைத் தவிர, அதிகாலையில் இக்குடும்பத்தினர் செய்யும் யோகாசனப் பயிற்சிகளின் இடையே தொந்தரவு செய்ய யாருமில்லை. உணவு கூட பெரும்பாலும் கம்பு சாதம், கோதுமை, ராகி கஞ்சி என சைவ உணவுதான். இத்துடன் மூலிகை இலைகளை மென்றபடி "வாக்கிங்' செல்வது, இவர்களை முழு ஆரோக்கியமுடன் வைத்துள்ளது.

மூலிகைக் காற்று தாண்டவமாடும் தனது வித்தியாசமான வீடு பற்றி ஓய்வு பெற்ற பொறியாளரான சுப்ரமணியம் கூறுகையில், "45 ஆண்டுகளாக கோவையின் மையப் பகுதியில் குடியிருந்தோம். தூசு, வாகன புகை உள் ளிட்ட மோசமான சுற்றுச்சூழலில் இருந்து விலகி, சுத்தமான காற்றை சுவாசித்து அமைதியாக வசிக்கவே இந்த புதிய வீட்டை அமைத்தோம். சிமென்ட், செங்கல், கான்கிரீட் இல்லாத இந்த வீட்டைக் கட்ட ரூ.11 லட்சம் செலவானது. பனிக்காலங்களில் வீடு முழுவதும் பரவும் பனி, மழைக்காலங்களில் தடையில் லாமல் நுழையும் மழைச் சாரல் ஆகியவற்றால் இயற்கையின் அத்தனை சுகத்தையும் கலப்படமில்லாமல் அனுபவிக்கிறோம். தடுப்புகள் இல்லாத ஒரே அறையில் எப்போதும் பேசியபடியும், ரேடியோ கேட்டபடியும் இருப்பதால் மிகவும் நெருக்கமாக உணர்கிறோம்,'' என்றார்.
இரு பசுக்கள், ஒரு கன்று வைத்திருந்தாலும் இக்குடும் பத்தினர் பால் குடிப்பதில்லை. "பசுவின் பால் அதன் கன்றுக் கானது. கன்றை கட்டிப் போட்டு தாயிடமிருந்து பாலை கறந்து குடிக்க நமக்கு உரிமையில்லை,'' என்கிறார் மெக்கானிக்கல் இன்ஜினியரான இவரது மகன் விஜேஷ். பண்ணையில் வளரும் மூலிகைப் பயிர், விளைப் பொருட்களில் துளியும் ரசாயன உரம் கலந்து விடாமல் இயற்கையாக வளர்ப்பதில்தான் இவரது முழுக் கவனமும்.
மாட்டின் கோமியம், வெல்லம், சாணம், தண்ணீர் கலந்து இவர் தயாரிக்கும் 'ஜீவாமிர்தம்' தான் தளதளவென வளர்ந்து நிற்கும் இங்குள்ள பயிர்களுக்கு உரம். "இயற்கைதான் இறைவன். அதை நன்கு புரிந்து நாசம் செய்யாமல் வாழ்வதால் இறைவனுடனே வாழ்வதாக உணர்கிறோம். எங்கிருந்தாலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள் வளர்த்து இயற்கையை மாசுப்படுத்தாமல் இருந்தால் அனைவரும் இறைவனுடன் வாழலாம்,'' என்கின்றனர் இக்குடும்பத்தினர் கோரஸாக. இதமான இளங்காற்று எப்போது வேண்டுமானாலும் வந்து தங்கிச் செல்லும் வகையிலும், பூகம்பம் தாக்காமல் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதாலும் இவர்களின் வீட்டுக்கு, "சிறந்த சுற்றுச்சூழல் வீட்டுக்கான" விருது வழங்கி "ராக்" அமைப்பு கவுரவித்துள்ளது.


நன்றி: தினமலர்

நாமும் இந்த வீட்டிற்கு "இயற்கை குடில்" என்ற பட்டம் சூட்டி கௌரவிப்போம்.

இந்த வீட்டை உருவாக்கிய சுப்ரமணியம் குடும்பதினருக்கு நமது அன்பான வணக்கங்களும் வாழ்த்துக்களும்.

Thursday 9 April 2009

எது நிரந்தரம் ?

எது நிரந்தரம் ?

துவக்கம் எற்பட்டால் முடிவும் வந்திடும்!
இயக்கம் எற்பட்டால் இறுதியில் நின்றிடும்!
மயக்கம் எற்பட்டால் மதியும் ஓய்ந்திடும்!
மரணம் எற்பட்டால் உடலும் சாய்ந்திடும்!

எது நிரந்தரம் ?

நீ உடல் அல்ல
நீ மனதல்ல
மதியாகியதும் நீ அல்ல
இவ்வுலகில் எதுவும் உனதல்ல
நீ படைத்ததும் பயனல்ல..

எது நிரந்தரம் ?

Friday 2 January 2009

யார் கடவுள் - 'நான் கடவுள்' -- பரஞ்சோதி மகான்

யார் கடவுள்?

காணும் பொருளெல்லாம்
கடவுள் மயமே
(பக்தன்)

காணும் பொருளெல்லாம்
அணுக்களின் சேர்க்கையே
(ஆராய்ச்சியாளன்)

காணும் பொருளெல்லாம்
காண்பவன் அறிவிலே
(அறிவாளி)

காணக் காண காண முற்பட்டவனே
கடவுளானானே
(தன்னிலையடைந்தோன்)

- "நான் கடவுள்" - ஞானவள்ளல் பரஞ்சோதி மகான்

Thursday 16 October 2008

Thoughts of Vethathiri Maharishi

விரைவில் வேதாத்திரி மகரிஷி அவர்களின்
கருத்துக்கள் இங்கே இடம்பெறும் ....

Monday 14 April 2008

புத்தாண்டு ப‌த்து க‌ட்ட‌ளைக‌ள்

த‌மிழ்ப்புத்தாண்டு ந‌ல்வாழ்த்துக்க‌ள்.

வாழிய‌ செந்த‌மிழ்

புத்தாண்டு ப‌த்து க‌ட்ட‌ளைக‌ள்


1. தேவை / அவ‌சிய‌ம் இல்லாமல் ஆங்கில‌த்திற்கு இட‌மில்லை. த‌மிழில் பேசுத‌ல் இழுக்கு என்று க‌ருதுவ‌து ந‌ம் அழிவுக்கான பாதை.

விளக்க‌ம் : த‌மிழ‌ர் இய‌க்குன‌ர் சீமான்
http://www.youtube.com/watch?v=lcAiBhnzDQk
2. தமிழீழ ம‌க்க‌ளுக்கு ந‌ம்மால் முடிந்த‌ ஆத‌ர‌வு / உத‌வி. ( அவ‌ர்க‌ளை, ந‌ம் சொந்த‌ ச‌கோத‌ர்க‌ளை, த‌மிழ் நாட்டிலேயே ''தீவிர‌வாதிக‌ள்'' என்று சொல்வ‌து ந‌ம‌க்குத்தான் அவ‌மான‌ம்)


3.கோக், பெப்ஸி புற‌க்க‌ணிப்பு. என் ம‌ண்ணின் விவ‌சாயிக‌ள் வாழ, இள‌னீருக்கு ஆத‌ர‌வு.
( என்.ஆர்.ஐ க்க‌ள் தாய‌க‌ம் செல்லும் போது நினைவு கொள்க‌)

4. க‌ருணாநிதி, ஜெய‌லலிதா இருவ‌ருக்கும் இனி வாக்க‌ளிப்ப‌திற்கில்லை. த‌மிழக‌த்திற்கு தேவை, புதிய‌தோர் விடிய‌ல். ச‌ன், ஜெயா வுக்கு முற்றுப்புள்ளி. ( அவ‌ர்க‌ளின் அரை உண்மை, அரை பொய் செய்திக‌ளை இனியும் ந‌ம்புவ‌த‌ற்கில்லை )


5.விஜ‌ய், பேர‌ர‌சு ப‌ட‌ங்க‌ளை இனியும் மெச்சு கொட்டி பார்த்து, ர‌சித்து ?! ந‌ம்மை நாமே ''கேணய‌ன்'' என்று சொல்லிக்கொள்வ‌த‌ற்கில்லை. கேளிக்கைக‌ளில் ஆபாச‌ங்க‌ளை காட்டி ப‌ண‌ம் ப‌றிக்கும் கும்ப‌ல்க‌ளுக்கு இட‌மில்லை.

6.ஊட‌க‌ங்கள் த‌ரும் செய்திக‌ளை அப்ப‌டியே ந‌ம்ப‌ மாட்டோம். ( ஹ‌ர்ப‌ஜ‌ன் விஷ‌ய‌த்தில் அவ‌ர்க‌ள் செய்த‌து கேலிக்கூத்து. 'தேரி மா கி'' என்று சொல்லிய‌ பின்னும் விடுத‌லை ஆன‌தை அவ‌மான‌ப்ப‌டாம‌ல், 'வ‌ன்தே மாத‌ர‌ம்'' சொல்லி அவ‌ர்க‌ள் கொண்டாடிய‌து கேவ‌ல‌ம்) ஒரு விஷ‌ய‌த்தை த‌லைகீழாக‌வே மாற்றிவிட்டார்க‌ள். குறிப்பாக‌ ஸ்டார் நியூஸ்.


7.த‌மிழை நம் அடுத்த‌ த‌லைமுறைக‌ளுக்கு கொண்டு செல்லும் முய‌ற்சிகளுக்கு ந‌ம்மாலான உத‌வி,ஊக்க‌ம்,ஆத‌ர‌வு.

http://tamilnation.org/literature/projectmadurai/intro.htm

8.''இனி ஒரு விதி செய்வோம்; அதை என்னாளும் காப்போம்.''
'' த‌னி ஒரு ம‌னித‌னுக்கு உண‌வில்லையெனில் ஜ‌க‌த்தினை அழித்திடுவோம்''

மாதத்திற்கு ஒரு முறையாவ‌து ந‌ம் ஏழை ம‌க்க‌ளுக்கு ந‌ம்மால் முடின்த‌ உத‌வி / க‌ல்வி / ஒரு வேளை உண‌வு. சொன்த‌ ம‌க்கள் கிராம‌ங்களில் ப‌ட்டினி சாவு கிட‌க்கும் பொழுது நாம் மூச்சு முட்ட மூன்று வேளை திண்று விட்டு தூக்க‌ம் வ‌‌ராம‌ல் புல‌ம்புவ‌து அபத்த‌ம்.
( ப‌ட்டினிச்சாவுக‌ள் எப்ப‌டி நிக‌ழும் என்று ஒரு முறை எண்ணிப்பார்க்க‌வும்)


9.புத்த‌க‌ம் ப‌டிக்கும் ந‌ல்ல‌ ப‌ழக்கங்க‌ளை விட்டு விட்டு ஆர்குட்டிலும், ஃபேஸ்புக்கிலும் ம‌ணிக்க‌ணக்கில் செலவிடுத‌ல் விர‌ய‌ம். ( புத்தக‌ம் ப‌டிக்கிற‌ ப‌ழக்க‌மே இல்லை என்ப‌தை கொஞ்ச‌ம் கூட ச‌ல‌ன‌மில்லாம‌ல் சொல்லும் இன்னொரு த‌லைமுறை உருவாகி வ‌ருவ‌து உண்மை. எல்லாம் வள‌ர்ப்பு முறை !)




11.'ம‌ர‌ம் வ‌ள‌ர்ப்போம்; ம‌ழை பெறுவோம்' இது க‌டமை ஆகி விட்ட‌து.



இனியும் அடுத்த‌வ‌ர்க‌ளை குத்த‌ம் சொல்லி ப‌ய‌னில்லை. நாம் ஒன்றுப‌ட்டு உருவாக்குவ‌து தானே ச‌முதாய‌ம்.மாற்ற‌ங்க‌ள் ந‌ம்மிலிருந்து தொட‌ங்க‌ட்டும்.



வாழிய‌ செந்த‌மிழ். வாழ்க‌ ந‌ற்றமிழ‌ர்.


வாச‌க‌ப்பிழை ம‌ன்னித‌ருளுக !


நன்றி: ப‌ச்சைத்தமிழ‌ன்

Sunday 30 March 2008

அன்புடன்

உண்மையான அன்பைப்
பேச்சின் மூலம்
வெளிப்படுத்த முடியாது
சேவைதான் வெளிப்படுத்தும்

- காந்தியடிகள்.

அன்பு என்பது
வாழ்க்கையில் இருண்ட
மேகங்களின் மீது
தோன்றும் ஒரேயொரு
வானவில்.

- இங்கர்சால்


அன்பினால் நல்லவர்களை
அடக்க வேண்டும். அச்சத்தால்
தீயவர்களை அடக்க வேண்டும்.

- அரீஸ்டாட்டில்.


அன்பு எங்கே உயர்ந்து
விளங்குகிறதோ அங்கே
உரிமைப் போராட்டம் இல்லை.

- வ.உ.சி.,


அன்பு என்பது தானாக வருவது , அதை
எவரும் விலைக்கு வாங்க முடியாது.

- லாங்பெல்லோ

உலகத்திலேயே
மிகவும் மலிவான
பொருள் அன்பு
ஒன்றுதான்.
அத தன்னை
வெறுப்பவனுக்கும்
இன்பத்தைத் தரும்.

- லாங்பெல்லோ

அன்பு இனிமையானது
நிலையானது! விசுவாசம்
நிறைந்தது.

- மார்க் ட்லைன்

அன்பை விற்கவோ வாங்கவோ
முடியாது. அன்பிற்கு அன்பே விலை

- கீட்ஸ்

ஒவ்வொருவரையும் அன்புடன்
நேசியுங்கள். உப்புத் தண்ணீர்
கூட உங்களுக்குச் சர்க்கரையாக
இனிக்கும்.

- சீனம்